Saturday, February 23, 2013

மல்லிகையே மல்லிகையே...

மதுரை மல்லி என்றாலே ஒரு மயக்கம் தான். அதன் மணமும், பூக்கள் கட்டிய நேர்த்தியும் மதுரையில் மட்டுமே பார்க்கலாம். அதுவும் திருமணம், சடங்கு, விசேஷங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அடர்த்தியாக நெருக்கி கட்டி, நடுவில் மனோரஞ்சிதமும் வைத்து மணக்க மணக்க மணப்பெண் வளைய வரும் பொழுது அதன் மணமும் கூடவே வரும். மல்லியுடன் கனகாம்பரமும் கட்டி, பார்க்க கலர்புல்லாக இருக்கும். சில வேளைகளில், கொழுந்தும் சேர்த்துக் கட்டி நம் நாட்டு கொடி வண்ணத்துடன் பார்க்கவே அழகாக இருக்கும். பூ விற்பவர்களும் பூவை நோகாமல் எண்ணிக் கொடுப்பார்கள். விலையும் குதிரைக் கொம்பாகாத்தான் இருக்கும்.


இப்படியெல்லாம் பார்த்த மல்லிகையில் மெட்ராஸ் மல்லி ஒரு பெரிய ஏமாற்றமே! மெட்ராஸ் மல்லி வாசனையே இல்லாமல் பார்க்க வெள்ளை நிறத்துடன் மல்லி போலவே இருக்கும். கொஞ்சம் விலை குறைச்சலாக வேண்டுமென்றால் அதை வாங்குவார்கள். மதுரை தவிர மற்ற ஊர்களில் மல்லிகைப் பூவை நெருக்கமாக கட்டுவதில்லை. மதுரையில் இன்னும் சில இடங்களில் பூக்களை நூறு இருநூறு என்று எண்ணிக் கொடுக்கிறார்கள். பல இடங்களிலும் ஒரு முழம் இரண்டு முழம் என்று கொடுக்கிறார்கள். பூ விற்பவர்களும் நீட்டி முழக்கி வியாபாரம் செய்வதும் . அவர்கள் தலையில் சுமந்து வரும் அந்த பூக்கூடையின் மணமும்...ஆஹா!


மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் மல்லிகைப் பூந்தோட்டங்களை பலவும் பார்க்கலாம். ஒவ்வொரு செடியிலிருந்தும் எடுக்கப்படும் பூக்கள் தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும், ஏன், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் செல்வதாக சொன்னார்கள். மதுரை விமான நிலையம் வந்த பிறகு விரைவில் பிற ஊர்களுக்கு அனுப்புவதும் வசதியாகி விட்டது.
வாசனை திரவியங்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். முன்பு சென்ட்ரல் மார்க்கெட் என்று அம்மன் கோவில் பக்கம் அன்று கொய்த மலர்களை வியாபாரத்திற்கு எடுத்து வருவார்கள். மூட்டை மூட்டையாக மல்லிகைப் பூ மொட்டுக்களைப் பார்த்தாலே அவ்வளவு நன்றாக இருக்கும் சீசன் சமயங்களில் ஒவ்வொரு பூவும் பெரியதாக தொடுத்தால் திண்டி திண்டியாக, சூடினால் நல்ல மணத்துடன்..ம்ம்.


மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை..என்று சும்மாவா பாடினார்கள்?

மதுரை மல்லி மதுரை மல்லி தான்!

7 comments:

  1. கடந்த மாதம்தான் மதுரை மல்லிக்கு மத்திய அரசின் “புவிசார் குறியீடு” அங்கீகாரம் கிடைத்தது.( ‘Madurai Malli’ has been given the Geographical Indication (GI) mark by the Geographical Indications Registry. Application for GI was made in June 2000 and approval came on January 16.)

    ReplyDelete
    Replies
    1. இந்த அங்கீகாரம் பற்றி படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது :) நான் என் வீட்டில் வளரும் மல்லிகைப் பூவை எடுத்து என்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் காண்பித்த பொழுது அதன் மணத்தில் மயங்கித்தான் போனார்கள்! பெரும்பாலான இந்தியர்கள் வீட்டில் மல்லிகைப் பூச்செடிகளைப் பார்க்கலாம். இப்பொழுதெல்லாம் அமெரிக்க கடைகளில் கூட இந்த செடிகள் கிடைக்கிறது!

      Delete
  2. கல்லூரி நாட்களுக்குப் பிறகு திடீர் எனத் தோன்றிய ஆன்மீக தேடல் பிரதி வெள்ளிக் கிழமை காலை ஆறு மணிக்கெல்லாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு போய்விடும். ஏழு மணிக்கெல்லாம் தரிசனம் முடித்து ஆளரவமற்ற பொற்றாமரைக் குளத்தின் படிக் கட்டுகளில் தனியே ஒரு மணி நேரமாவது உட்கார்ந்திருந்து விட்டு வருவேன்.

    அப்போது அங்கே ஒரு பிராமணர் முன்னோர்களுக்கு திதி கொடுத்துக் கொண்டிருப்பார். அவர் பக்கத்தில் ஒரு பெண் கையில் குழந்தையோடு கூடை நிறைய மல்லிப் பூவை வைத்துக் கொண்டு வருகிறவர்களிடம் அக்கா, அண்ணே என ஏற்ற இறக்கத்தோடு கூப்பிட்டு பூ விற்றுக் கொண்டிருப்பார்.....தொடர்ந்து ஐந்தாறு வருடங்களில் நான் பார்க்க அந்த பெண் குழந்தை வளர்ந்து அம்மாவோடு கூட சுற்றிக் கொண்டிருக்கும்.

    சமீபத்தில் கடந்த ஆண்டு கோவிலுக்குச் சென்ற போது அந்த பெண் குழந்தை தன் இடுப்பில் ஒரு குழந்தையோடு அதே இடத்தில் தன் அம்மாவைப் போலவே கூடை நிறைய மல்லிப்பூ விற்றுக் கொண்டிருந்தது.

    என்னைத் தவிர எல்லோருக்கும் வயதாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த(!) தருணமது. # Nostalgia :)

    ReplyDelete
    Replies
    1. என்னைத் தவிர எல்லோருக்கும் வயதாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த(!) தருணமது ...:)

      Delete
    2. எப்படி திடீரென்று ஆன்மீகத் தேடல் வந்தது என்று ஒரு பதிவு போட வேண்டும்,சரவணன். சுவாரசியமான பதிவாக இருக்கும்.

      வாழையடி வாழையாக தொடரும் குடும்ப பூ வியாபாரம்!

      என்னைத் தவிர எல்லோருக்கும் வயதாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த(!) தருணமது .. :)

      Delete
  3. நாளுக்கு நாள் விலை ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ஆனாலும் வாங்குபவர்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

      Delete

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...